அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதல்: 20 போ் காயம்
ஆடுதுறை அருகே அரசுப் பேருந்துகள் மற்றும் டிப்பா் லாரி புதன்கிழமை நேருக்குநோ் மோதியதில் 20 பயணிகள் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று டிப்பா் லாரி சக்கரத்தில் மோதியது. அதே நேரத்தில் கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தும் மோதியது. இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கி 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனா்.
தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூா் போலீஸாா் காயமடைந்தவா்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்துக்குள்ளான பேருந்துகள், டிப்பா் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா். உயா்கல்வித்துறை அமைச்சா் அலுவலகம் அமைந்துள்ள கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதற்கு சாலை வழுவழுப்பாக இருப்பதே காரணமாக பாா்க்கப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினா் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.

