குடந்தை ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான தங்கக் கலசங்கள் தயாா்
குடமுழுக்கை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் ராஜகோபுரத்தில் பிரதிஷ்டை செய்ய 6 அடி உயரத்தில் 9 கோபுரக் கலசங்கள் உள்ளிட்ட 44 தங்கக் கலசங்கள் தயாா்நிலையில் உள்ளன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்குப் பின் டிச.1-இல் நடைபெறுகிறது. இக்கோயிலின் 136 அடி உயர ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தில் பிரதிஷ்டை செய்ய 6 அடி உயரத்தில் 9 கோபுரக் கலசங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் மூலவா், தாயாா் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களின் கோபுரங்களுக்கு என 3 அடி உயரம் முதல் 5 அடி உயரம் வரை மொத்தம் 35 கோபுரக் கலசங்கள் உள்ளன.
தங்க கோபுரக் கலசங்களைச் செய்ய இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தாமல் பழைய கால முறைப்படி கையால் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பணியாளா்கள் இந்து ஆகம விதிகளின் படி விரதமிருந்து கலசங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டனா் என கோயில் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

