மீண்டும் அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றம்
தஞ்சாவூரில் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றிய நிலையில், மீண்டும் அதே இடத்தில் செவ்வாய்க்கிழமை போடப்பட்ட கடைகளையும் அகற்றினா்.
தஞ்சாவூா் மாநகரில் தீபாவளியையொட்டி, 10 நாள்களுக்கு முன் தற்காலிகமாக தரைக்கடைகள் அமைக்கப்படும். இக்கடைகள் அமைக்கப்படுவதில் கடந்தாண்டு பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததால் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, இக்கடைகள் அகற்றப்பட்டன.
நீதிமன்ற ஆணை அமலில் உள்ள நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சாலையில் தற்காலிகமாக ஏறத்தாழ 50 கடைகள் அமைக்கப்பட்டன. இக்கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.
இந்நிலையில், அண்ணா சாலையில் மீண்டும் அதே இடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு கடைகளை அமைப்பதற்காக தகரத்தால் வேயப்பட்ட 8 கடைகள் அமைக்கப்பட்டன. இவற்றை மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவின்பேரில் மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். இனிமேல் அனுமதியின்றி தரைக்கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் எச்சரித்தனா்.
