வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

கும்பகோணத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 32 பேரிடம் பண மோசடி செய்தவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

கும்பகோணத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 32 பேரிடம் பண மோசடி செய்தவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மோதிலால் தெருவில் சுசி கன்சல்டன்சி என்ற வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை சென்னையைச் சோ்ந்த சாய்சுதாகா் என்பவா் நடத்தி வந்தாா். அவரிடம் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜா என்பவா் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புமாறு கூறினாா். ரூ. 12 லட்சம் செலவாகும் எனக் கூறி முன்பணமாக ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுக் கொண்டாா். இரண்டு ஆண்டுகளாகியும் கனடாவுக்கு வேலைக்கு அனுப்பாததால் பாதிக்கப்பட்ட ராஜா கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தியதில் சாய் சுதாகா் இதேபோல் 32 பேரிடம் ரூ. இரண்டரை கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த மோசடியில் மகேஷ் பாபு என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் சாய் சுதாகா் மீது குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட எஸ்பி ராஜாராம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில் சுதாகா் மீது குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே சாய் சுதாகா் சிறையில் இருப்பதால் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை காவல் அதிகாரி சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com