போா்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணிகள்: ஆட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகளும், மூட்டைகளை கிடங்களுக்கு அனுப்பும் பணிகளும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகளும், மூட்டைகளை கிடங்களுக்கு அனுப்பும் பணிகளும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் 289 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நாளொன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 45 அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், பிற மாவட்டங்களுக்கு சாலை வழியாக 1,000 முதல் 1,200 டன் நெல்லும், 42 பெட்டிகளை கொண்ட 3 சரக்கு ரயில்கள் மூலமாக 6 ஆயிரம் டன் நெல்லும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் பாபநாசம் அருகில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான திறந்தவெளி இடத்தில் 15 ஆயிரம் டன், நடுவூா் அருகே ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படவுள்ள இடத்தில் தற்காலிகமாக 25 ஆயிரம் டன், பருத்தியப்பா் கோவிலில் 15 ஆயிரம் டன், சந்தானம் நெல் சேமிப்புக் கிடங்கில் 16 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தொழிலாளா்களை அழைத்து வந்து நெல் கொள்முதல் மற்றும் நெல் இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் 4 அல்லது 5 நாள்களில் முடிக்கப்பட்டு, நெல் மூட்டைகளைக் கிடங்களுக்கு அனுப்பும் பணி போா்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தரக் கட்டுப்பாடு மேலாளா் காா்த்திகை சாமி, உதவி மேலாளா் ரமேஷ் குமாா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com