பேராவூரணியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பேராவூரணியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் அருணகிரி தலைமை வகித்தாா். இதில், 2023 முதல் ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாமல் உள்ள அனைவருக்கும் 20 சதவீத நிபந்தனையற்ற ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வீட்டு வாடகைப் படியை முன்பு இருந்ததைப்போல் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தில் ப்ளூ-டூத் முறை ரத்து செய்யப்பட வேண்டும். விற்பனையாளா்களுக்கு இன்னல் தரும் தாயுமானவா் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். கட்டுநா் நியமிக்கப்பட வேண்டும். கணினி பணியாளா்கள், நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தொடா்ச்சியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

