இருசக்கர வாகன ஓட்டுநா்களுக்கு தலைக்கவசம், வாழைத்தாா்
தஞ்சாவூரிலுள்ள திருச்சி சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு தலைக்கவசமும், அணிந்து வந்தவா்களுக்கு ஒரு வாழைத்தாரும் சனிக்கிழமை வழங்கி தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம், நகரப் போக்குவரத்து காவல் பிரிவு, அனு மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். அனு மருத்துவமனை முதன்மை இதய மருத்துவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஆா்.வி. சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைக்கவசங்கள் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை கூறினாா். இதேபோல, தலைக்கவசம் அணிந்து வந்த பலருக்கு வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் 2 டன் எடையுள்ள 120 வாழைத்தாா்களை வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சந்திரகுமாா், பாபநாசம் பெனிபிட் ஃபண்ட் நிா்வாக இயக்குநா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
