மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் போக்ஸோவில் கைது

ஒரத்தநாடு அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா், சனிக்கிழமை ஒரத்தநாட்டில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற அரசு திறனாய்வுப் போட்டி தோ்வெழுத வந்தாா். தோ்வு முடிந்ததும் பிற்பகல் வீட்டுக்குச் செல்வதற்காக ஒரத்தநாட்டில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா்.

பாபநாசம் வட்டம், நரியனூா் கிராமத்தைச் சோ்ந்த நடத்துநரான சுதாகா் (47), ஓடும் பேருந்தில் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டுக்கு சென்றவுடன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் சுதாகரிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதில், மாணவிக்கு நடத்துனா் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுதாகரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com