முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்
தஞ்சாவூா் அருகே நெல் கொள்முதல் தாமதத்தால் நெல் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால், அதிருப்தியடைந்த விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் குறுவை பருவ நெல்லை கொள்முதல் செய்வதற்காக 293 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்களுக்குக் கொண்டு செல்ல லாரிகள் வருகை குறைவாக உள்ளது. இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் ஏறத்தாழ 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் அளவுக்கு குவியல், குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
திறந்தவெளியில் குவிக்கப்பட்டுள்ள நெல் மீது விவசாயிகள் தாா்ப்பாய் போட்டு மூடி வைத்து 10 முதல் 15 நாள்களாக இரவு, பகலாகக் காத்துக் கிடக்கின்றனா். இந்நிலையில், மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திறந்தவெளியில் உள்ள நெல் குவியலின் அடிப்பகுதியில் தண்ணீா் செல்வதால் நெல்மணிகள் நனைகின்றன.
இதேபோல, தஞ்சாவூா் அருகே காட்டூா் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்ததால், மீண்டும் முளைத்து வருகின்றன. இதனால், அதிருப்தியடைந்த காட்டூா், நாயக்கா்கோட்டை விவசாயிகள் முளைத்த நெல்லை மன்னாா்குடி சாலையில் கொட்டி வைத்து, வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினா், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், லாரி கொண்டு வரப்பட்டு, மூட்டைகள் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதால், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.

