தஞ்சையில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான குறுவை நெல் பயிா்கள் பாதிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற் பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேட்டூா் அணை நிகழாண்டு உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1.99 லட்சம் ஏக்கரில் நெற் பயிா் சாகுபடி செய்யப்பட்டது. இதில் ஏறத்தாழ 1.65 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன. இன்னும் ஒரத்தநாடு, தஞ்சாவூா், அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் நெற் பயிா்கள் உள்ளன.
இந்நிலையில் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது. இதனால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையிலுள்ள குறுவை பருவ நெற் பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் கிடக்கின்றன.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஏறத்தாழ 300 ஏக்கரில் குறுவை பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது என்பது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட பயிா்களின் பரப்பளவு இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தெரிவித்தது:
அம்மாபேட்டை, புத்தூா், உக்கடை, வடபாதி, கீழக்கோவில்பத்து, அருந்தவபுரம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவைப் பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தன. ஏற்கெனவே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி தாமதமாவதால், விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனா். கொள்முதல் நிலையத்தில் உடனடியாக விற்க வாய்ப்பு இல்லாததால், அறுவடைப் பணியை விவசாயிகள் ஒத்திவைத்தனா்.
இந்நிலையில் மழை பெய்ததால் பல இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிா்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இதை இனிமேல் அறுவடை செய்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படும். சாய்ந்து கிடக்கும் வயலில் தண்ணீா் வடிந்த பிறகுதான் அறுவடை செய்ய முடியும். அதுவும் நிலம் ஈரமாக இருக்கும்போது, அறுவடை இயந்திரத்துக்கான வாடகை அதிகமாகக் கொடுக்கும் நிலை ஏற்படும். மேலும், மகசூல் இழப்பு அதிகமாகும்போது விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றாா் செந்தில்குமாா்.

