மயிலாடுதுறை- பட்டுக்கோட்டை -மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்தல்
பட்டுக்கோட்டை: மயிலாடுதுறையிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்தி மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் வ. விவேகானந்தம், துணைத் தலைவா் வே. ராமலிங்கம், செயலா் கு. முகேஷ், துணைச் செயலா் ப. ஆத்மநாதன், பொருளாளா் ஈகா. வைத்தியநாதன் ஆகியோா், மத்திய ரயில்வே அமைச்சா், ரயில்வே வாரிய தலைவா்,தெற்கு ரயில்வே பொது மேலாளா் ,திருச்சி மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா்கள் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கும் காரைக்குடியில் இருந்து மானாமதுரை, மதுரை, அருப்புக்கோட்டைக்கும் ரயில் பாதைகள் அமைந்து மும்முனை ரயில் சந்திப்பாக விளங்குகிறது.
காரைக்குடி வழியாக மதுரை சென்றால் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மிக எளிதாகச் செல்லலாம். திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படவில்லை.
மேலும் காரைக்குடி திருப்பத்தூா், மேலூா், மதுரை புதிய அகல ரயில் பாதை அமைக்க 25 ஆண்டு காலமாக ரயில் பயணிகள், வா்த்தக சங்கங்கள் தொடா்ந்து கோரிக்கை வைக்கின்றன. இந்த ரயில் பாதைக்கான திட்டத்தைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் மதுரை, திருப்பத்தூா், மேலூா் மதுரை புதிய ரயில் பாதை அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ரயிலில் ஒன்றரை மணி நேரத்தில் ரயிலில் சென்று விட முடியும்.
மேலும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம், திருவாரூா் , திருத்துறைப்பூண்டி தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.
இதன் மூலமாக மும்மதங்களின் ஆன்மிக தலங்களும், சுற்றுலா தலங்களும் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு அதிக அளவில் பயணம் செய்வாா்கள். இதன் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
சுற்றுலா மேம்பாடு மூலம் இப்பகுதிகளில் பொருளாதார வளா்ச்சி அடையும். எனவே தெற்கு ரயில்வே சாா்பில் மயிலாடுதுறையில் இருந்து திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். காரைக்குடி திருப்பத்தூா் மேலூா் மதுரை புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
