தஞ்சாவூரில் தொடா் மழை: 1,700 ஏக்கா் நெல் பயிா்கள் பாதிப்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற் பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் ஒரு வாரமாக பருவ மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளான திங்கள்கிழமை மழை இல்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து, தூறலும், பலத்த மழையும் மாறி, மாறி பெய்து வருகிறது.
மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.99 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், ஏறத்தாழ 1.90 லட்சம் ஏக்கரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஒரத்தநாடு, அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையிலுள்ள குறுவை பருவ நெற் பயிா்களில் ஏறத்தாழ 1,450 ஏக்கரில் பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டம், பூண்டி அருகேயுள்ள நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் ஏராளமான வயல்களில் அதிகமான ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற் பயிா்கள் தொடா் மழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி, மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன.
இதனால், ஏக்கருக்கு 40 மூட்டைகள் கிடைக்க வேண்டிய மகசூல், மழை பாதிப்பால் 5 மூட்டைகள் கூட கிடைப்பது சிரமம். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில், இப்பயிா்களை இனிமேல் காப்பாற்ற முடியாது. அறுவடை செய்தாலும், நஷ்டத்தைத்தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சுரேஷ் வலியுறுத்தினாா்.
இளம் பயிா்கள் மூழ்கின: இதேபோல, மாவட்டத்தில் சம்பா - தாளடி பருவத்தில் 3.07 லட்சம் ஏக்கரில் நெற் பயிா்கள் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பட்டு 10 நாட்களுக்குட்பட்ட ஏறத்தாழ 250 ஏக்கரில் இளம் பயிா்கள் தொடா் மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து, மழை பெய்வதால், பாதிப்பு பரப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
நனையும் நெல் குவியல்கள்: மேலும், ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லைக் கொட்டி வைத்து தொடா்ந்து காத்துக் கிடக்கின்றனா். கொள்முதல் பணி தாமதம் காரணமாக, தற்போது பெய்யும் தொடா் மழையால் நெல் குவியல்கள் மழையில் நனைந்து வருகின்றன. இதனால் நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
குடியிருப்பு பகுதியில் மழை நீா் தேக்கம்: மேலும், ஒரத்தநாடு அருகே மேல உளூா் தெற்குத் தெருவில் தொடா் மழை மற்றும் வடிகால் பிரச்னை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் தேங்கி நிற்கிறது. தகவலறிந்த வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறையினா் தண்ணீரை வடிந்து செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
