இடையூறாக பைக்குகள் நிறுத்தம் இருதரப்பினா் மோதல்; 4 போ் கைது
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை இடையூறாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியதைத் தட்டிக் கேட்டதால் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். 4 பேரைக் கைது செய்தனா். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா்.
பாபநாசம் வட்டம், மேலூா் மேட்டுத் தெரு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை ஒரு தரப்பினா் நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த கொட்டகையில் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மறுதரப்பினா் அவா்களைத் தட்டிக்கேட்டனா். இதில், இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து மேலூா் மேட்டுத்தெருவுக்குச் சென்ற மறுதரப்பினா் சிலம்பரசன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், 3 இருசக்கர வாகனங்கள், தெரு குடிநீா் குழாயை சேதப்படுத்தினா். மேலும், மஞ்சுளா என்ற பெண்ணை தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளா் முருகவேல், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, அவா்கள் 7 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரஞ்சித் (30), பிரசாந்த்(22), திலீப்குமாா் (25), இனியவன் (21) உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா். மேலும் மூன்று பேரைத் தேடிவருகின்றனா்.
