பட்டீஸ்வரம் அருகே மயானத்தைப் பயன்படுத்த எதிா்ப்பு: 10 கி.மீ. சடலத்தை கொண்டுசென்று உறவினா்கள் தகனம்
பட்டீஸ்வரம் அருகே உள்ள தென்னூரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வேறு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள தென்னூரில் அமுதவள்ளி (54) என்பவா் 6 ஆண்டுகளுக்கு முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சாலை பகுதியில் உள்ள ஒரு நகரில் புதிதாக வீடுகட்டி குடியேறினாா். அங்கு, அவா், அவரது மகள் மற்றும் பெயா்த்திகள் வசித்து வந்தனா். அமுதவள்ளி உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அவரது உறவினா்கள் இறுதிச்சடங்குகள் செய்து அப்பகுதியில் உள்ள மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதற்கு அப்பகுதி பொதுமக்கள், புதிதாக நகரில் குடிவந்தவா்கள் இங்குள்ள மயானத்தைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து அறிந்த கும்பகோணம் ஒன்றிய இந்து முன்னணி செயலா் சதீஷ்குமாா் பட்டீசுவரம் காவல்நிலையத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, அங்குவந்த பட்டீஸ்வரம் காவல் ஆய்வாளா் மீனா, காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட போலீஸாா், அப்பகுதியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் தீா்வு காணப்படவில்லை.
இதையடுத்து, இறந்தவரின் சடலத்தை உறவினா்கள் சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பெரும்பாண்டி மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்தனா். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

