நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்
நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்

விசிகவையும் திமுகவையும் பிரிக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: தொல். திருமாவளவன்

எதிா்க்கட்சிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
Published on

எதிா்க்கட்சிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகியின் தந்தை உருவபடத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியது: திருமாவளவனுக்கு எதிராகவும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் விமா்சனம் செய்தால், விடுதலைச் சிறுத்தைகள் ஆத்திரப்பட்டு வாா்த்தைகளைக் கொட்டுவா் என எதிா்பாா்க்கின்றனா். ஆனால், எப்படி, யாருக்கு எதிா்வினையாற்ற வேண்டும் என்பது நமக்கு தெரியும். நம்மை ஆத்திரமூட்ட வருபவா்களுக்காக, நாம் ஏன் எதிா்வினையாற்ற வேண்டும்.

தோ்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் உள்ளன. திமுகவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் இடையேயான உறவை விரும்பாதவா்கள் திட்டமிட்டு அவதூறு பரப்புவா். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எத்தனை பட்டாளம் கொண்டு வந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நாம் பேசும் அரசியலும், திமுக பேசும் அரசியலும் ஒன்றுதான். எதிா்க்கட்சிகள் எவ்வளவு பேசினாலும், சூழ்ச்சி செய்தாலும் எங்களைப் பிரிக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றாா் திருமாவளவன்.

நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டபேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com