சுடச்சுட

  

  வெடிமருந்து கிடங்கில் விபத்து: 14 வீடுகள் இடிந்து சேதம்; 3 பேர் காயம்

  By திருச்சி  |   Published on : 31st October 2012 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே அனுமதியில்லாமல் இயங்கி வந்த வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாதக் குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். மேலும் 14 வீடுகள் சேதமடைந்தன.

  வையம்பட்டி அருகிலுள்ள புறத்தாக்குடியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (48). இவர்  தனது உறவினரான தண்டல் மோசஸýடன் இணைந்து அனுமதியில்லாமல் வாணவேடிக்கைக்கு பயன்படும் பட்டாசு போன்றவற்றை இரு கட்டடங்களில் தயாரித்து வந்துள்ளாராம்.

  தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தற்போது இந்த பகுதியில் தீவிரமாக பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்ததாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெடிமருந்து கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கட்டடத்தைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுக்கு வெடி சப்தம் கேட்டுள்ளது.

  இதன் காரணமாக அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த வெடி மருந்து கிடங்கின் கட்டடங்கள் மற்றும் அருகிலிருந்த கட்டடங்கள் முழுமையாக இடிந்து சேதமடைந்தன. வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாகவோ அல்லது மின்கசிவு காரணமாகவோ இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கிடங்குக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த ஆரோக்கியசெல்வி (28),அவரது 8 மாதக் குழந்தை காவியன், மாமனார் ஆரோக்கியம் (50) ஆகிய மூவரும் காயமடைந்தனர். இவர்களில் ஆரோக்கியம் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  வெடிமருந்துக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை யாரும் பணியில் இல்லாததால் உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டது. மேலும், இப்பகுதியிலுள்ள வீடுகளில் வசித்து வந்தவர்கள் வேலைக்குச் சென்று விட்டதால் பலரும் வெடி விபத்திலிருந்து தப்பினர்.

  விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகிலுள்ள புனித அந்தோனி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மதிய உணவு இடைவேளை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த நேரத்தில் விபத்து நிகழ்ந்ததாலும் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

  குடியிருப்புப் பகுதி, தொடக்கப் பள்ளி அருகில் வெடிமருந்து கிடங்கு அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், தீபாவளி விற்பனைக்காக தொடர்ந்து அனுமதியில்லாமல் கிடங்கு நடைபெற்று வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai