திருச்சி நவல்பட்டு அருகேயுள்ள பூலாங்குடி காலனியில் வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளியை தாக்கி அவருடைய மனைவி, மகளிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நவல்பட்டு அருகேயுள்ள பூலங்குடி காலனி, மசூதி தெருவைச் சேர்ந்தவர் பெல் ஒப்பந்த தொழிலாளி பாஸ்கர் (45). இவரது மனைவி லட்சுமி (39), மகள் ப்ர்த்தி (21) ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலை ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் லட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலி, ப்ர்த்தி அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது மனைவி, மகள் அலறல் சப்தத்தை கேட்டு எழுந்து வந்த பாஸ்கரை அந்த மர்ம நபர்கள் ஒரு இரும்பு ராடால் தாக்கிவிட்டுச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த காயத்துடன் இருந்த பாஸ்கரை திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.