ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் ரசீது வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு புதன் கிழமை (25-ம் தேதி) முதல் அவை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணங்களை செலுத்த வசதியாக அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சிறப்புக் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூடுதல் கட்டணங்களை செலுத்த முடியாத பயணிகள் ரயில் பயணத்தின்போது டிக்கெட் பரிசோதகர்களிடமும் செலுத்திக்கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த வகையில் சிறப்பு கவுன்டர்களில் கூடுதல் கட்டணங்களை செலுத்திய பயணிகள் தவிர மற்ற பயணிகள் பயணத்தின்போது டிக்கெட் பரிசோதகர்களிடம் செலுத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களாக ரயில்களில் பயணிக்கும் முன்பதிவு செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கான ரசீதுகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதன்கிழமை ரயிலில் பயணித்த முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிலர் இது குறித்து திருச்சியில் கூறுகையில்,
பொதுவாகவே ரயில்களில் பயணிக்கும் பயணிகள் வகுப்பு மாறி பயணித்தாலோ அல்லது முன்பதிவில்லை டிக்கேட் பெற்று முன்பதிவு பெட்டியில் பயணித்தாலோ அதற்கான கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதும் அவற்றுக்கு ரசீது கொடுப்பதும் வழக்கம். ஆனால் தற்போது ரயில் கட்டண உயர்வுக்கு பின்னர் ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்கு பெரும்பாலான டிக்கெட் பரிசோதகர்கள் கூடுதல் கட்டணத்துக்குரிய ரசீதை வழங்கவில்லை. எனவே வசூலிக்கும் கூடுதல் கட்டணத்துக்கு முறையாக ரசீது வழங்கவேண்டும் என்றனர்.