Enable Javscript for better performance
போலி வெளிநாட்டு ஏடிஎம் கார்டு தயாரித்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் தலைமறைவாக இருந்த போலி ஏடிஎம் கார்டு தயாரித்த இளைஞர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

    உறையூர் அருகிலுள்ள புத்தூரில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த 19 ஆம் தேதி இரவு இரண்டு பேர் தாங்கள் வைத்திருந்த பல ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுத்துக்கொண்டிருந்தனர். இதையறிந்த வரிசையில் நின்ற புத்தூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் இதுகுறித்து உறையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் அந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள்  கருமண்டபம், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கனி மகன் முபராக் அலி (23), அதே பகுதி குளத்துக்கரையைச் சேர்ந்த மணி மகன் ராஜா (30) என்பதும், அவர்கள் வைத்திருந்த கார்டுகள் அனைத்தும் போலி வெளிநாட்டு ஏடிஎம் கார்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கருமண்டபம், வசந்தம் நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ராகவன் (24) என்பவர் வெளிநாடுகளில் வசிக்கும் தனது உறவினர்களின் வங்கி மற்றும் ஏடிஎம் கார்டு ரகசிய எண்களை திருடி, அதன்மூலம் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, முபராக் அலி, ராஜா ஆகியோருடன் சேர்ந்து பணம் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து முபராக் அலி, ராஜா ஆகியோரை கைது செய்த போலீஸார், தலைமறைவான இலங்கை தமிழர் ராகவனை தேடிவந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உறையூரிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் அதிகமான ஏடிஎம் கார்டுகளுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதையறிந்த அந்த ஏடிஎம் மையக்காவலாளி ராமகிருஷ்ணன் உறையூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், அவர் தேடப்பட்டு வந்த ராகவன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவர் வைத்திருந்த 80-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai