4 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்ம ரத மரியாதை
By ஸ்ரீரங்கம், | Published On : 11th January 2015 05:48 AM | Last Updated : 11th January 2015 05:48 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி இராப்பத்து விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவையொட்டி, பட்டர்களுக்கு மரியாதை செய்யும் பிரம்ம ரத மரியாதை நிகழ்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி, கைசிக ஏகாதசி விழாவின்போது நம்பெருமாள் முன்பு புராணம் படிக்கும் பட்டர்கள், அரையர்களை மரியாதை செய்யும் விதமாக பல்லக்கில் அமர வைத்து ஊழியர்கள் ஊர்வலமாக தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் விடுவர்.
மனிதனை மனிதன் சுமப்பதா என்று கடந்த 2011-ம் ஆண்டு அறங்காவலர் குழு இதற்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டர்களும், அரையர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், மனுவை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர் குழு பிரம்ம ரத மரியாதை நிகழ்ச்சியை நடத்த அனுமதியளித்தது.
வைகுந்த ஏகாதசி இராப்பத்து விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சி சந்திர புஷ்கரணியில் நடைபெற்றது. தொடர்ந்து நம்பெருமாள் உபயக்காரர் மரியாதையுடன் ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தார்.
பின்னர், கைசிக புராணம் பாடிய திருவேங்கட பராசுர பட்டருக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டது. பல்லக்கில் அவரை அமரவைத்து நம்பெருமாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி,திருப்பாணாழ்வார் சன்னதி, கூரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட இடங்களில் மரியாதை செய்விக்கப்பட்டது. பின்னர் நான்கு உத்தர வீதிகளிலும் வலம் வந்து அவரது வீட்டில் கொண்டு விட்டனர்.
பிரம்ம ரத மரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த சுமார் 57 பேர் தெற்கு சித்திரை வீதியில் கூடியிருந்தனர். அவர்கள் பிரம்ம ரத மரியாதையை தடுத்து நிறுத்துமாறு முழக்கமிட்டனர். போலீஸார் அவர்கள் அனைவரையும் கைது செய்து, திருவானைக்கா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரம்ம ரத மரியாதை ஊர்வலத்தில் வெளி ஆட்கள் யாரும் நுழைந்து விடாதபடி காவல் துறை துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.