சமுதாய அக்கறையை விதைப்பவரே உண்மையான ஆசிரியர்: துணைவேந்தர்

சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர் என்றார் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர் என்றார் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.

  திருச்சியில் மணற்கேணி பதிப்பகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியை ந. மணிமேகலை, எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் க. துளசிதாசன் ஆகியோருக்கு நிகரி சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கி மேலும் பேசியது:

  ஆசிரியர்கள் என்போர் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பார் ராதாகிருஸ்ணன். இன்றைய நிலையை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

  அறிவைத் தரும் கல்வி பாகுபாட்டைத் தருமா அவ்வாறு பாகுபாட்டைத் தருமானால் அவர்கள் எப்படிக் கல்வியாளர்களாக இருக்க முடியும்

  சமுதாய அக்கறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்பவர்தான் உண்மையான ஆசிரியராக இருக்க முடியும். சமுதாயத்துக்கு எப்படி உதவுவது என்பதற்கு கல்வி வழிகாட்ட வேண்டும்.

  தஞ்சைப் பகுதியிலுள்ள கிராமப்புற மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் திறன் வளர்ப்புப் பயிற்சியை வழங்கி அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்துத் தர தமிழ்ப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் சார்பிலேயே இரு ஆய்விதழ்களையும் தொடர்ந்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாஸ்கரன்.

  பாராட்டுரை வழங்கி பேராசிரியர் பா. கல்யாணி பேசியது:

  கல்விச் சூழலும், தமிழ்ச் சூழலும் இருண்ட காலத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள், கல்லூரி முதலாமாண்டுத் தேர்வில் தோல்வியடையும் காட்சியைக் காண முடிகிறது.

  இவற்றை மாற்ற பிளஸ் 1 தேர்வையும் பொதுத்தேர்வாக்கிவிட வேண்டும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் முப்பருவக் கல்விமுறையை அமலாக்க வேண்டும். கல்லூரிக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசுத் தேர்வுகளை தாய்மொழி வழியில் எழுத அனுமதிக்க வேண்டும்.

  கல்வி நிலையங்களில் ஆசிரிய சமூகம் சாதியாக அணி திரண்டு நிற்கும் காட்சிகளும் இப்போது காண முடிகிறது. இதை மாற்ற இதுபோன்ற சமத்துவ ஆசிரியர்களைத் தேர்வு செய்து பாராட்டி முன்நிறுத்த வேண்டும் என்றார் கல்யாணி.

விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் பேசியது:

  மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள்- சிறுபான்மையினர்- தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையை சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்றார் ரவிக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com