சுடச்சுட

    

    என்.ஐ.டி, ஐ.ஐ.டி.களில் எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கான சேர்க்கை

    By திருச்சி,  |   Published on : 01st June 2016 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் உள்ள என்.ஐ.டி., ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்.டெக், எம்.ஆர்க். உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

    நாடு முழுவதும் 30 தேசிய தொழில்நுட்பக் கழகம், 4 ஐஐடிகள், மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கக்கூடிய 7 தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம். டிசைன் ஆகிய படிப்புகளில் 9492 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கு பொது நுழைவுத்தேர்வு மற்றும் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்ஐடி சூரத்கல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    முதல் சுற்று கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 2 வரையிலும், 2 வது சுற்று கலந்தாய்வு ஜூன் 7 முதல் 10 வரையிலும், மூன்றாவது சுற்று கலந்தாய்வு ஜூன் 20 முதல் 23-ம் தேதி வரையிலும் நடைபெற உளளது. இதைத் தவிர தேசிய அளவில் காலியாக இருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    சேர்க்கையின்போது மாணவ, மாணவிகள் ரூ.20,000-த்தை சேர்க்கை உறுதி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

    இந்த தொகை மாணவ, மாணவிகளுக்கு எந்த என்.ஐ.டி, ஐ.ஐ.டி.களில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ, அந்த கல்வி நிறுவனத்தில் செலுத்த வேண்டிய தொகையின்போது ஈடு செய்யப்படும்.

    திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சேர்க்கையின் போது, கோழிக்கோட்டிலுள்ள என்.ஐ.டி.யில் உயர் அழுத்த பொறியியல் படிப்பைத் தேர்வு செய்த மாணவி மெரிசன் பென்சத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணத்தை என்.ஐ.டி. இயக்குநர் சீனிவாச சுந்தர்ராஜன் வழங்கினார்.

    சூரத்கல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக வகித்து வரும் சீனிவாச சுந்தர்ராஜன், மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் உள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai