சுடச்சுட

  

  ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க 150 மாட்டுவண்டிகளில் வந்த கிராம மக்கள்

  By திருச்சி  |   Published on : 01st June 2016 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 150 மாட்டுவண்டிகளில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமியை தரிசிக்க செவ்வாய்க்கிழமை காலை வந்தனர்.

  கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், தாரணாம்பட்டி, கீழவெளியூர், செம்பாறை கல்லுப்பட்டி, பி.மேலப்பட்டி, ராக்கம்பட்டி, புதுப்பட்டி, கொரைக்கலாம்பட்டி ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாட்டுவண்டிகளில் கூண்டு கட்டியபடி பயணித்து ஸ்ரீரங்கம் வந்தனர்.

  ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி இவர்களது குலதெய்வமாகும். குலதெய்வத்தை வணங்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கமாம்.

  இதேபோல, தற்போது வந்துள்ள இவர்கள் அனைவரும் புதன்கிழமை அரங்கநாத சுவாமியை தரிசிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து மேற்கண்ட 7 கிராமங்களின் ஊர்த் தலைவர்கள் ஏ. பாலகிருஷ்ணன், ஆர். ராமையா ஆகியோர் கூறியது:

  ஊராளிக்கவுண்டர் இனத்தைச் சேர்ந்த நாங்கள் பெரும்பாலும் விவசாயிகள். எங்களது குலதெய்வமான அரங்கநாதரை வணங்க நாங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளோம். இதற்காக தலைமை ஊரான தாரணாம்பட்டியில் சில நாள்களுக்கு முன் சகுனம் பார்த்து, எங்களது முன்னோர்களின் வழியே குலதெய்வத்தை தரிசிக்க பண்டைய கால முறைப்படி மாட்டுவண்டிகளை கட்டிக் கொண்டு குடும்பத்துடன் வந்துள்ளோம்.

  புதன்கிழமை காலை எங்களது குழந்தைகளுக்கு மொட்டை போடுவோம். தொடர்ந்து மாலையில் கொள்ளிடம் ஆற்றில் 7 ஊர்களைச் சேர்ந்த பூசாரிகள், சுவாமி மாடுகள் குளித்து முடித்தவுடன் பூஜை செய்து, ஊர் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவிப்போம். இதையடுத்து அரங்கநாத சுவாமியை வடக்கு வாயில் வழியே தரிசனம் செய்வோம்.

  வியாழக்கிழமை காலை 7 ஊர்களிலிருந்து கொண்டு வந்த உண்டியலை பூஜை செய்து, அரங்கநாதருக்கு அர்ப்பணிப்போம். அப்போது ஊரிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகளை அனைவருக்கும் தானமளிப்போம். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவில் வந்த வழியே மாட்டுவண்டியில் ஊர் திரும்புவோம் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai