சுடச்சுட

  

  முடிமாற்று சிகிச்சையால் இறந்தபயிற்சி மருத்துவர் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

  By திருச்சி,  |   Published on : 11th June 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முடிமாற்று அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பயிற்சி மருத்துவர் சந்தோஷ்குமாரின் சடலம் திருச்சியில் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு உடல் உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

  வழுக்கை தலையா... கவலை வேண்டாம் அரை மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும் என்பன போன்ற விளம்பரங்கள், தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் மட்டுமன்றி சுவரொட்டி விளம்பரங்களாக நகரங்களில் மட்டுமல்லாமல், குக்கிராமங்கள் வரை பரவிவிட்டன. பெண்கள், சிக்குமுடி வைத்து அலங்காரம் செய்து கொள்வதுபோல ஆண்களுக்கு விரும்பிய வடிவத்தில், விக் வைத்தல், விக்கை தலையில் ஒட்டிக்கொள்ளுதல் என்ற நிலையைத் தாண்டி, ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எனப்படும் முடி மாற்று சிகிச்சைகள் அண்மைக்காலமாக பரவிவருகிறது.

  இதற்காக, புகழ்பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே, காஸ்மெடிக் பிரிவு செயல்பட்டு வந்தன. தற்போது, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமன்றி சிறு நகரங்கள் வரை, பல நிறுவனங்கள் நவீன, பியூட்டி பார்லர் என்ற பெயரில் சிசிக்கை மையங்களை தொடங்கியுள்ளன.

  பயிற்சி மருத்துவர் சாவு: திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவைச் சேர்ந்த தம்பதி பாண்டியராஜன் - ஜோஸ்லின். பாண்டியராஜன் அரசுப் பேருந்தில் நடத்துநராகவும், ஜோஸ்லின் வேலூர் மாவட்டம், ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும் உள்ளனர். இவர்களின் மகன் சந்தோஷ்குமார் (22). தற்போது இவர்கள் ஆரணி எஸ்.வி. நகரில் வசித்து வருகின்றனர். சந்தோஷ்குமார் மட்டும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, அதே கல்லுôரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

  முன் தலையில் சற்று வழுக்கை இருந்ததால், அது தனது அழகை குறைப்பதாக கருதிய அவர், முடிமாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஏ.ஆர்.எச்.டி. (அட்வான்ஸ் ரொபாடிக் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் - குளோபல்) என்ற, முடி மாற்று சிகிச்சை மையத்தில் கடந்த மே 15-ம் தேதி சிகிச்சை பெற்றார்.

  சிகிச்சை முடிந்த சிறிது நேரத்தில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் ஆரணி சென்றார். மறுநாள், அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், வேலுôர் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 17-ம் தேதி இறந்தார்.

  இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊரான திருச்சி கொண்டு வந்து எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது பெற்றோர் அடக்கம் செய்தனர்.

  இந்நிலையில், சந்தோஷ் பயிற்சி மருத்துவர் என்பதால், அவர் இறந்த விவரம் மருத்துவக் கல்வி இயக்ககம் வழியாக சுகாதாரத் துறைக்கு சென்றது. அதன் பின்னரே சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து முடிமாற்று அறுவைச் சிகிச்சை மையம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

  பிரேதப் பரிசோதனை: இந்நிலையில் பயிற்சி மருத்துவர் சந்தோஷ்குமார் மரணத்திற்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்கள்தான் காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது தாய் ஜோஸ்பின், சென்னை நுங்கம்பாக்கம் போலீஸில், கடந்த ஜூன் 4-ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை நடத்த அவரது சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்ற அனுமதி பெற்றனர்.

  இதையடுத்து, திருச்சி கோட்டை பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை சந்தோஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அவரது உடல் உள்ளுறுப்புகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இதற்கான மருத்துவப் பரிசோதனையை மருத்துவர் சரவணக்குமார் மேற்கொண்டார். வட்டாட்சியர் சிவசங்கரன், நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  தொடர்ந்து, மருத்துவச் சேவை பணிகள் இயக்குநரகம் அளித்த புகாரில், ஜூன் 2-ம் தேதி மாலை ஏ.ஆர்.எச்.டி., மையத்துக்கு மாநகராட்சி நிர்வாகமும் சீல் வைத்தது. இதுகுறித்த அறிவிப்பும் அந்த மையத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற முடி மாற்று சிகிச்சை அளிக்க பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் காஸ்மெடிக் பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், அந்த மையத்தில் சிகிச்சை அளித்தவர்கள் எம்.பி.பி.எஸ்., மட்டுமே முடித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

  மேலும், இந்த மையம், மஹாராஷ்டிர மாநிலம், புணேவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் 11-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கியில் கடன் பெற்றுத்தந்து, சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளதாகவும், எனவே இங்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் மட்டும் கிளை உள்ள நிலையில், கோவையில் விரைவில் கிளை தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல பிற நிறுவனங்கள், சென்னையில் 45 மையங்கள், பிற நகரங்களில் 10 என மொத்தம் 55 மையங்களுடன் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai