சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கோபுரப்பட்டியிலுள்ள முற்சோழர் கால சிவன் கோயிலில் சோழர் கால அளவு கோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் மருத்துவர் இரா.கலைக்கோவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  மண்ணச்சநல்லூர் வட்டம், நொச்சியத்தை அடுத்த கூடப்பள்ளி- மண்ணச்சநல்லூர் சாலையில் அமைந்துள்ள கோபுரப்பட்டியில் அவனீசுவரம் என்ற பெயரில் உள்ள முற்சோழர் கால சிவன் கோயிலும், மேற்றளி என்றழைக்கப்படும் பல்லவர் கால சிவன் கோயிலும், ஆதிநாயகப் பெருமாள் பெயரில் விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளன.
  இக்கோயில்களில் முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியை அர.அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அவனீசுவரத்தில் பொதுக்காலம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால அளவுகோலைக் கண்டறிந்தனர்.
  விமானம், முகமண்டபம் மட்டுமே கொண்டு விளங்கும் இக்கோயிலின கோட்டச்சிற்பங்கள் நான்கும் முற்சோழர் கால மரபில் விளைந்த சிறப்புக்குரிய இறைவடிவங்களாகும்.
  இங்குள்ள தூண் பாதங்களில் ராமாயணக் காட்சிகளும், சிவபுராண, பாகவதக் கதைகளும், சமூகஞ்சார்ந்த கலை, பண்பாட்டுச் செய்திகளும் சிற்றுருவச் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன.
  மாவட்ட கோயில்கள் வேறெதிலும் காணப்படாத அளவுக்கு சிவபெருமானின் பல்வேறு வகையான ஆடல் தோற்றங்களும், குடக்கூத்து உள்ளிட்ட பல ஊரக ஆடல்வகைகளும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் ஆனந்ததாண்டவம் மகரதோரணச் சிற்பமாகவும் காட்டப்பட்டுள்ளது.
  இக்கோயிலின் முகமண்டபத் தென்பகுதித் தாங்குதளத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் முதலாம் ராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டைப் படித்துக் கொண்டிருந்த நிலையில், தாங்குதளத்தின் மேற்கம்பில் சோழர்கால அளவுகோல் வெட்டப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
  இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்ட நிலையில் 1.50 மீட்டர் அளவினதாக வெட்டப்பட்டுள்ள இந்த அளவுகோல் உள்ளூர் நிலங்களை அளக்கச் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நிலமளந்த கோலாக இருக்கலாம்.
  இதுபோன்ற அளவுகோல்கள் புன்செய், நன்செய் நிலங்களுக்கேற்ப மாறுபட்ட அளவுகளில் திருச்சி மாவட்டக் கோயில்களில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இப்புதிய அளவுகோல் தற்போது பாச்சூர் என்றழைக்கப்படும் பாச்சில், கோபுரப்பட்டி, அழகியமணவாளம் முதலிய ஊர்களில் முற்சோழர் காலத்தே வழக்கில் இருந்த நிலமளந்த கோலாகலாம்.
  மாவட்டத்தில் இதுநாள் வரையிலும் கிடைத்துள்ள பல அரசமரபுகள் சார்ந்த அளவுகோலோடு புதிய கண்டுபிடிப்பை ஒப்பிட்டு ஆராய்ந்தால், வேளாண் குறித்த பல பயனுள்ள செய்திகளை அறிய வாய்ப்புள்ளது. அளவுகோல் கண்டறியப்பட்ட தகவல் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் கலைக்கோவன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai