சுடச்சுட

  

  சமயபுரம் மாரியம்மன் கோயில் மார்ச் 12-இல் பூச்சொரிதல்: பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய நடவடிக்கை

  By DIN  |   Published on : 05th March 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் அம்மனை பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கையை திருக்கோயில் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி.
  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க உள்ள பூச்சொரிதல் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
  சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மார்ச் 12 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 13 ஆம் தேதி பிற்பகல் வரை பொதுமக்களின் கட்டணமில்லா தரிசனத்துக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
  பக்தர்களுக்குத் தேவையான அளவு பாதுகாப்பு வசதிகள் அளிப்பதுடன், அவர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் பேரூராட்சி, காவல்துறையினர் செய்து தர வேண்டும்.
  கோயில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரித்திடவும், குடிநீர், கழிப்பிட வசதியை அமைத்திடவும் பேரூராட்சி சார்பில் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தாற்காலிகப் பேருந்து நிறுத்துமிடங்களான பழைய பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூர் சாலை, ஆட்டுச்சந்தை, வி.துறையூர் சாலை ஆகிய இடங்களைச் சுத்தப்படுத்தி தேவையான அளவு மின் விளக்கு வசதியும், தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு ஜெனரேட்டர் வசதியும், குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
  அரசுப் போக்குவரத்துக் கழகம் கோயிலுக்கு பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். சமயபுரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் போதிய அளவுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் க. தென்னரசு, சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai