சுடச்சுட

  

  "திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக ஏப். 1-ல் மாநிலக் கருத்தரங்கு'

  By DIN  |   Published on : 06th March 2017 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தி, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வியாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
  தமிழ்நாடு கல்வியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்வு, அதனால் ஏற்படும் கல்விச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதற்கு தலைமை வகித்த பொதுப்பள்ளிகளின் மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது:
  புதிய கல்விக் கொள்கையின் ஒருபகுதி தான் மருத்துவக் கல்லூரிகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்). தகுதிப்படுத்துகிறோம் என்ற பெயரில், தகுதியான நபர்கள் மருத்துவக் கல்வி பயில்வதை இத்தேர்வு தடுக்கிறது.
  மாநில அரசால் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிக்கும் உரிமையை இத்தேர்வு பறிக்கும். இது நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்வோருக்கும், மாநில அரசு கல்வி நிறுவனங்களில் பயில்வோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இல்லாதபோது, சமமான போட்டித் தேர்வு சாத்தியமில்லை. மொழி, பொருளாதார வேறுபாடுகள் நிலவும் இந்தியாவில் ஒரே தகுதித் தேர்வு ஏற்புடையதாகாது.
  எனவே, நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். எந்தப் படிப்புக்கும் தேசிய நுழைவுத் தேர்வு முறையை மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது. தேர்வுக்கு மேல் தேர்வு என்று மாணவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதை நிறுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி, கற்றல் சூழலை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திருச்சி தூய வளனார் கல்லூரியில் கருத்தரங்கக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில், அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளோம் என்றார்.
  முன்னதாக, கூட்டத்தில் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைமன் வரவேற்றார்.
  இயேசு சபை கல்வியாளர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜான் கென்னடி, இயேசு சபை கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் சேவியர் அல்போன்ஸ், தூய வளனார் மேலாண்மை கல்லூரி இயக்குநர் ஜோ. அருண் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai