சுடச்சுட

  

  குடிமராமத்துத் திட்டத்துக்கு புத்துயிர்: 2 ஆண்டுகளில் ரூ.400 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்

  By DIN  |   Published on : 08th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீர் நிலைகளை புனரமைக்க குடி மராமத்துத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்து நிகழாண்டில் ரூ.100 கோடியிலும், வரும் ஆண்டில் ரூ.300 கோடியிலும் மக்கள் இயக்கமாகத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
  திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
  தமிழகத்தில் மானாவாரி சாகுபடியை விவசாயிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், நாட்டிலேயே முதல் முறையாக நடப்பாண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும்விதமாக மானாவாரி வேளாண் இயக்கம் என்னும் மிகப்பெரும் திட்டம் ரூ.803 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை மையமாகக் கொண்டு தொகுப்புக்கு 1000 ஹெக்டேர் என்ற அளவில் 1000 தொகுப்புகள் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி நில மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  வறட்சி காரணமாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள் 100 நாளிலிருந்து 150 நாள்களாகவும், கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ரூ.350 கோடியில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளும், நகர்ப்புற பகுதிகளில் ரூ.160 கோடியில் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த ரூ.25 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் உலர் தீவனக் கிடங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்திலுள்ள நீர் ஆதாரங்களை திறம்பட மேலாண்மை செய்து வறட்சியை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் நிலைகளைப் புனரமைக்க பண்டைய குடிமராமத்துத் திட்டத்துக்கு புத்துயிர் அளித்து, நிகழாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.  வரும் ஆண்டில் ரூ.300 கோடியில் மக்கள் இயக்கமாகத் திட்டப்பணிகள்  செயல்படுத்தப்படும் என்றார் பழனிசாமி.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai