Enable Javscript for better performance
குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசிமாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாக்கான காப்புக்கட்டுதல் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மார்ச் 7-ம் தேதி காளியாவிட்டம் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு புத்தூர் தொட்டிப்பாலம் அருகேயுள்ள குழுமாயி அம்மன் கோயிலிலிருந்து அம்மன், ஓலைப்பிடாரி அலங்காரத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து புத்தூர் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
    2-வது நாளான புதன்கிழமை அம்மன் புத்தூர் வீதிகளில் வலம் வந்தார். வீடுகள் தோறும் மாவிளக்கு பூஜை மற்றும் அர்ச்சனை, ஆராதனைகளுடன் சுத்தபூஜை எனப்படும் நிகழ்வு நடைபெற்றது.
    3-வது நாளான வியாழக்கிழமை மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நடைபெற்றது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் புத்தூர் மந்தைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. மருளாளி எனப்படும் பூசாரி, அலங்காரத்துடன் சுற்றி வந்து, நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுவரப்பட்ட ஆடுகளை காவு கொடுத்து, அதில் வழியும் ரத்தத்தை குடித்து அருளாசி வழங்கினார்.
    நேர்த்திக்கடன் செலுத்துவதில் முதல் மரியாதை மாவட்ட நிர்வாகத்துக்கும், அடுத்ததாக இந்து அறநிலையத்துறைக்கும் வழங்கப்படும். இதன்படி, முதலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடு பலியிடப்படும், அடுத்ததாக அறநிலையத்துறை ஆடு, பின்னர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் ஆடுகள் வரிசையாக பலி கொடுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான (சுமார் 600-க்கும் மேற்பட்ட) ஆடுகள் இதில் பலியிடப்பட்டன. வெள்ளிக்கிழமை  மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 11-ம் தேதி இரவு அம்மன் மீண்டும் ஊர்வலமாக கோயிலை சென்றடையும் குடிபுகும் நிகழ்வுடன் மாசித்திருவிழா நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai