சென்னை -தூத்துக்குடி இடையே கடல் வழிப்போக்குவரத்து திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்
By DIN | Published on : 12th March 2017 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி வரையில் கடல் வழிப்போக்கு வரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்துக்கு ஏற்கெனவே வழங்கியதைவிட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் கடந்த 2010 முதல் 2013 வரையிலான மூன்றாண்டுகளில் ரூ. 878 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி பிரதமாரானதும் 2014 முதல் 2017 வரையிலான மூன்றாண்டுகளஇல் ரயில்வேதுறைக்கு மட்டும் ரூ. 1,553 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை தூத்துக்குடி குமரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று, ரூ.3,400 கோடியில் அந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமும் ரூ.10 ஆயிரம் கோடியில் நடைபெறவுள்ளது.
அதைப்போலவே கடல்வழிப்போக்குவரத்தும் தொடங்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது. சென்னையிலிருந்து. கடலூர், பாண்டிச்சேரி, நாகை வழியாக தூத்துக்குடி வரையில் கடல்போக்குவரத்து தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில்,
திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. வளர்ச்சித்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கட்சி சார்பற்று பிற கட்சியினர் கேட்டது போலவே நானும் கேட்கிறேன். இண்டர்சிட்டி விரைவு ரயிலை திருவனந்தபுரம் வரை நீடித்த மத்திய அரசு அதனை மணப்பாறையில் நிறுத்துமாறு மூன்று ஆண்டாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதுபோல நகரும் படிக்கட்டுகளும் பராமரிக்கப்படவில்லை. இதுபோல பல கோரிக்கைகள் மத்திய அமைச்சகத்துக்கு அதிகாரிகள் யாரும் கொண்டு செல்வதில்லை. என்றார்.