சுடச்சுட

  

  தமிழக பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
  காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் வி.ராஜாராம்:   குடிமராமத்துத் திட்டத்தை விவசாயிகளுடன் இணைந்து மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
  தமிழக அரசின் நிதியை கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களைத் தூர் வாருதல் என்பது இயலாத காரியம், எனவே, திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள், சேவை மனப்பான்மையுடன் உள்ளவர்களிடம் நன்கொடைகளை பெற்று அதன் மூலம் தூர்வாருதல் பணியை மேற்கொள்ளலாம்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அயிலை சிவ.சூரியன்: விவசாயிகளின் எதிர்பார்ப்பு இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆண்டில் அறிவித்த ரூ.6000 கோடி பயிர்க்கடன் முழுமையாக வழங்கப்படாத நிலையில், நிகழாண்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.7000 கோடி பயிர்க்கடன் எப்படி வழங்கப்படப் போகிறது என்பது தெரியவில்லை.
  தற்போது நிலவும் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை.
  காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் இணைச் செயலர் ஆர்.சுப்பிரமணியன்:
  கடுமையான வறட்சி நிலவும் நிலையில், தற்போது நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதில் 25 அடிக்கு சேறு, சகதியும்தான் உள்ளது. மேட்டூர் அணையை தூர்வாரினால், தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திட முடியும். ஆனால், மேட்டூர் அணையைத் தூர்வாருவதற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. எனவே, விதிஎண் 110-ன் கீழ் அல்லது பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். குடிமராமத்துத் திட்டப் பணிகளை விவசாயிகளின் பங்கேற்புடன் செய்ய வேண்டும்.
  தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன்: கடுமையான வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு அதிர்ச்சியில் இறந்தும், தற்கொலை செய்து கொண்டும் உள்ள நிலையில், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்த  அறிவிப்பு இல்லை.
  காவிரிப் பாசன மேம்பாட்டுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள், கதவணைகள் கட்டுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களும் தளளுபடி செய்ய வேண்டும்என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம் நிறைந்த பட்ஜெட்டாக உள்ளது.
  தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் பூ.விசுவநாதன்: கரும்புக்கு டன்னுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அந்த விலை கிடைக்கவில்லை. இலவச மின் இணைப்பு கோரியிருந்த விவசாயிகளுக்கு 2011-ம் ஆண்டு வரையிலான
  காலம் வரை பதிவுசெய்தவர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றம் தருகிறது.நீர்நிலை ஆதாரத் திட்டத்துக்காக ரூ.4791 கோடி ஒதுக்கீடு வரவேற்புக்குரியது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai