Enable Javscript for better performance
தேரோட்டத்தில்  சக்கரத்தை தள்ளும் கட்டை விழுந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தேரோட்டத்தில்  சக்கரத்தை தள்ளும் கட்டை விழுந்து இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 25th March 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி திருவெள்ளறை பெருமாள் கோயில் தேர் திருவிழாவில் தேர் சக்கரத்தை தள்ள பயன்படுத்தும் கட்டை விழுந்ததில் இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறையில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தேர் சக்கரத்தை சன்னக் கட்டையை கொண்டு தள்ளுவது ஒவ்வொரு ஆண்டும் திருவெள்ளறையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பனாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் சக்கரத்தை தள்ளிவிட முறை ஒதுக்கப்பட்டிருந்தது.  
    காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியவுடன் பனாம்பாளையம் ஊராட்சியின் ராசாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சன்ன கட்டையில் ஏறி, அமர்ந்து தேர் சக்கரத்தை தள்ளிவிட்டபடி வந்தனர்.  
    மாலை 3.15 மணியளவில் தேர் மேற்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ராசாம்பாளையம் மேலூர், வேஸ்கார் பண்ணையைச் சேர்ந்த ரங்கசாமி மகன் சுரேஷ் (32) ஊர்க்காரர்களுடன் சேர்ந்து சன்ன கட்டையில் ஏறியபோது கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சன்ன கட்டை சுரேஷின் தலையில் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.  
    இதையடுத்து, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ் அங்கு உயிரிழந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai