சுடச்சுட

  

  பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டும்: ஆனி ராஜா

  By DIN  |   Published on : 27th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைவில் நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என்றார் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஆனி ராஜா.
   இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில இளம் மகளிர் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
   இஸ்லாமிய மதத்தில் உள்ள முத்தலாக் சட்டத்தை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டுவது போல, மற்ற மதங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மீதும் காட்ட வேண்டும்.
   கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், பட்ஜெட்டில் ரூ. 2,700 கோடி மட்டுமே ஒதுக்கி, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவின் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. பெண்களை ஏமாற்றும் செயல்.
  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்தியாவில் தயாரிப்போம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முன் வைத்தார். ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து ஒருமுறை கூட பேசவில்லை.
   பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் மனித உரிமை கேள்விக்குறியாக உள்ள பாகிஸ்தான் நாட்டில் 22 சதவீதமாகவும், நேபாளத்தில் 33 சதவீதமாகவும், வங்காளதேசத்தில் 32 சதவீதமும், ஆப்பிரிக்க நாடுகளில் 54 சதவீதமும் இருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 12 சதவீதமே உள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இச்சட்டம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றார் ஆனி ராஜா.  முன்னதாக, மாநாட்டிற்கு மாநில செயலரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி. பத்மாவதி தலைமை வகித்தார். அபராஜிதா ராஜா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ஜீவசுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   மாநாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.  மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டவரைவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai