சுடச்சுட

  

  தில்லி ஜந்தர்மந்தரில் கடந்த 14-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி மகாதேவன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஊருக்கு வர மறுத்துவிட்டதாக அவரது மகள் தெரிவித்தார்.
  திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள  ஊருடையார்பட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன் (60). தில்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ள அவருக்கு புதன்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
  இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை ஊருக்கு வருமாறு அழைத்தும் மகாதேவன் வர மறுத்துவிட்டாராம்.
  திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, அங்கு வந்த மகாதேவனின் மகள் பி. பிருந்தா கூறியது:
  எங்கள் சொந்த கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்காக வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை கடுமையான வறட்சியின் காரணமாக கட்ட முடியாத நிலையில், மனம் உடைந்தவராகவே காணப்பட்ட எனது தந்தை, தில்லி போராட்டத்தில் பங்கேற்றார்.
  தொடர்ந்து 15 நாள்கள் போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஏற்கெனவே தில்லி போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரின் தாக்குதலால் காயமடைந்திருந்த அவர், தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது நாங்கள் ஊருக்கு வர அழைத்தும் வர மறுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியரிடம் விவரம் தெரிவிக்க உள்ளேன் என்றார் பிருந்தா.
  நலமுடன் உள்ளார்: போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட விவசாயி மகாதேவன் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து தில்லியில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, போராட்டத்தில் விவசாயி மகாதேவனும் பங்கேற்றுள்ளார். உடல்நலம் குன்றிய போதும் தங்களுடன் போராட்டத்தில் இருப்பதாகக் கூறி அவர் வந்துள்ளார் என்றார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai