சுடச்சுட

    

    கொடநாடு சம்பவங்கள்: மர்மத்தை வெளிக் கொண்டு வரவேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    By DIN  |   Published on : 01st May 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் தொடர்பான மர்மத்தை உரிய விசாரணை மூலம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
    திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொல்லப்பட்டது, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சாவில் சந்தேகம் என, கொடநாடு சம்பவத்தில் பல மர்மங்கள் உள்ளன. போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டு வர வேண்டும்.
    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு யார் யார் பணம் பட்டுவாடா செய்தார்கள் என்ற பட்டியல் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு எந்த விசாரணையும் இல்லை. எனவே தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அதிமுக அரசின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகள் இருப்பதால், இன்னும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் இரண்டு தரப்பினரின் எண்ணம். பின்வாசல் வழியாக தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஸ்டாலின்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க முடியாது.
    வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல உள்ளது. இங்கு இருக்கும் நிலைமையை சொன்னால்தான் மத்திய அரசு நிவாரணம் அளிக்கும். ஆனால், அதை மூடிமறைத்து பொய் சொல்கின்றனர்.
    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பெண்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்றும் போராடி வருகின்றனர். ஆனால், அதிமுக அரசு அவர்கள் மீது பொய் வழக்குப் பதிந்து பெண்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
    பேட்டியின்போது, மாவட்டத் தலைவர்கள் திருச்சி மாநகர் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், திருச்சி வடக்கு என். ஜயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ஹெச். ராஜாவுக்கு நாவடக்கம் தேவை
    "பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார். பெரியார், சோனியா காந்தி பற்றி கேவலமாக பேசிய அவர், தற்போது தில்லியில் போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். உயிரைப் பணயம் வைத்து ஒரு மாதக் காலத்துக்கு மேலாக போராட்டம் நடத்தியவரை அவர் இழிவாகப் பேசுவதை ஏற்கமுடியாது' என்றார் இளங்கோவன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai