Enable Javscript for better performance
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் சிவபெருமான் தாயுமானவராய் மருத்துவம் பார்த்த ஐதீக விழா: அறுபத்து மூன்று- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மலைக்கோட்டை கோயிலில் சிவபெருமான் தாயுமானவராய் மருத்துவம் பார்த்த ஐதீக விழா: அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலா

    By DIN  |   Published on : 05th May 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மலைக்கோட்டை கோயிலில் பக்தை ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் வந்து மருத்துவம் செய்த ஐதீக பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    சிவபக்தியிற் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதி குழந்தைப்பேறுக்காக அவரது தாய் வீட்டுக்கு செல்லும்போது வெள்ளப்பெருக்கால் அவரால் செல்ல இயலாமல் போகிறது. இதையறிந்த சிவபெருமான், தனது பக்தையின் துயர் நீக்க, பெண் வேடம் பூண்டு மருத்துவம் செய்து குழந்தையைத் தொட்டிலிலிட்டுச் சென்றதாக ஐதீகம். தாயாகச் சென்று மருத்துவம் பார்த்ததால் இங்குள்ள சிவபெருமான் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார்.
    இந்த ஐதீகப் பெருவிழா சித்திரைத் திருத்தேர் பெருவிழாவின் ஐந்தாம் திருநாளில் நடத்தப்படும்.
    இக்கோயிலில் சித்திரைத் திருத்தேர் பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கற்பகத்தரு, கிளி, பூதம், கமலம், கைலாச பர்வதம், அன்னம் வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஐந்தாம் திருநாளான வியாழக்கிழமை சிவபக்தியிற் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் வந்து மருத்துவம் பார்த்த ஐதீக விழா நடத்தப்பட்டது.
    கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமானவருடன் மட்டுவார் குழலம்மையும், தனியே மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து ஐதீகப் பெருவிழாவில் உள்ளவாறு நிகழ்வுகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன. குழந்தையைத் தொட்டிலில் இடும் நிகழ்வை பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியர்கள் நடத்தினர். பெருவிழா முடிந்தவுடன் சுகப்பிரசவ மருந்தும், பீஜாதானம் எனப்படும் வரதானம் நெல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகளுடன் அறுபத்து மூன்று நாயன்மார்கள் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஆறாம் திருநாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவமும், 9 ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 8) திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. ஐதீகப் பெருவிழாவில் திருக்கோயில் உதவி ஆணையர் நா.சுரேஷ், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai