சுடச்சுட

  

  தில்லை நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்ததாக ஒருவர் கைது

  By DIN  |   Published on : 05th May 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி வரை மோசடி செய்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  திருச்சி ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் முருகேசன் (43). இவரது மனைவி ஈஸ்வரி (39). இவர்கள் இருவரும் சேர்ந்து திருச்சி தில்லை நகரில்  ஜி.எம்.ஜி. என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தொடர்ந்து இவர்கள், மாதத் தவணையாக ரூ.500, ரூ.1000, ரூ.2,000 கட்டினால் நிலம் வழங்கப்படும் என்றும், வைப்புத் தொகை செலுத்தினால் அதிகபட்ச வட்டி கொடுக்கப்படும் என விளம்பரம் செய்தனர்.  இதைப் பார்த்த திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்நிறுவனத்தில் மாதத் தவணை, வைப்புத் தொகைகளை செலுத்தத் தொடங்கினர். இதன் மூலம் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளனர். முதலில் சிலருக்கு ஒழுங்காக நிலம் கொடுத்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தை மூடிவிட்டு, தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்து ஏமாந்த 500-க்கும் மேற்பட்டோர், திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தனர்.
  இதன்பேரில், போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிந்து, ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் உரிமையாளர்களான முருகேசன், ஈஸ்வரி உள்ளிட்டோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
  இந்நிலையில் முருகேசன், திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உதவி கண்காணிப்பாளர், அருள், ஆய்வாளர் செ.கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், அங்கு வந்த முருகேசனை கைது செய்து, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு நல நீதிமன்ற நீதிபதி லீலா சுமதி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். நீதிபதி, முருகேசனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார், மதுரை சிறையில் அடைத்தனர்.
  ரியல் எஸ்டேட் நிறுவன மோசடியில் ஈடுபட்ட மேலும் சிலரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai