திருச்சி மண்டல அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் தர்னா
By DIN | Published on : 07th May 2017 07:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கக் கோரி திருச்சி அருகே பெல் நகரில் உள்ள திருச்சி மண்டல டாஸ்மாக் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், தொமுச, ஏஐடியுசி, அரசு பணியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு டாஸ்மாக் தொமுச சங்க செயலாளர் மலர்க்கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், திருச்சி மண்டலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 540 பேர் பணியை இழந்துள்ளனர். இவர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.
இந்த ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவினால் பணி வழங்காமல், உரிய பணி நியமன உத்தரவின் மூலம் பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதிய கடை அமைக்கச் செல்லும்போது, விரட்டும் மக்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், புதிய கடை அமைக்கும் இடத்தின் உரிமையாளருக்கு முன்தொகை வழங்க வேண்டிய சிரமத்தையும் போக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் முருகதாஸ், தேவா, சந்திரசேகரன், சீனு, ராமமூர்த்தி., பிரகாஷ், செந்தில் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் தர்னாவில் ஈடுபட்ட இவர்கள், தொடர்ந்து டாஸ்மாக் மண்டல மேலாளர் முருகனிடம் மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக அளித்து, கலைந்து சென்றனர்.