சுடச்சுட

  

  தொப்பை இருந்தால் இருதய நோய் வர வாய்ப்புகள் அதிகம் என்றார் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். சென்னியப்பன்.
  தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மாரடைப்பு என்ற தலைப்பில் பேசியது:
  கருவுற்ற 21-ஆம் நாள் முதல் மனிதன் இறக்கும் வரை 24 மணி நேரமும் இடைவிடாமல் வேலை செய்யக்கூடியது இருதயம். இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக, இருதயத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் பழுதால், அதன் சுருங்கி விரியும் தன்மை பாதிப்பே மாரடைப்பு எனப்படும்.
  அமெரிக்கர்களைவிட 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவும், ஐரோப்பியர்களைவிட 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவும், ஜப்பானியர்களைவிட 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உலகில் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படும் 50 லட்சம் பேரில் 60 சதவீதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இதில் 50 சதவீதத்தினர் 45 வயதுக்குட்பட்டவர்களே. மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் வரை இறக்கின்றனர்.
  மாரடைப்பு ஏற்பட புகையிலைப் பொருள்களை உபயோகிப்பது, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மன அமைதியின்மை போன்றவை காரணிகளாகின்றன. 80 சதவீதம் சர்க்கரை நோயாளிகளின் இறப்புக்கு இருதய நோய்தான் காரணம். சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் இருதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
  தொப்பை இருந்தால் இருதய நோய் வர வாய்ப்பு அதிகம். ஏனெனில், கெட்ட கொழுப்பு அனைத்தும் வயிற்றில்தான் சேகரிக்கப்படுகிறது. எனவே, ஆண்களின் வயிறு 90 செ.மீ. அளவிலும், பெண்களின் வயிறு 80  செ.மீ. அளவிலும் இருப்பது அவசியம். தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  பெண்கள் 4 மணி நேரத்துக்கு மேல் தொலைக்காட்சி பார்த்தால் மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். அதேபோல, ஆண்கள் அதிக நேரம் உட்கார்ந்து பணியாற்றக் கூடாது.எனவே, கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருள்களை தவிர்த்து, காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றை அதிகம் உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றார் அவர்.
  கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. அருள்ஜோஸ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai