சுடச்சுட

    

    வங்கிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 07th May 2017 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
    திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், கடனை வசூலிப்பதற்காக நீதிமன்றம் மூலம் வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் நீதிமன்ற நோட்டீஸ் விவரத்தை ஆட்சியரிடம் எடுத்துக் கூறினர்.
    இதையடுத்து அரசு அதிகாரிகள்- வங்கியாளர்கள்- விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார்.
    அதன்படி, திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்டாட்சியர் ம.கணேஷ்குமார், வேளாண் இணை இயக்குநர் உதுமான் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி, வங்கிகளின் மண்டல அலுவலக அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொ. அய்யாக்கண்ணு, புலியூர் ஏ.நாகராஜன், அயிலை சிவ.சூரியன், ம.ப.சின்னத்துரை, பூ.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடுமையான வறட்சியிலும் வங்கி நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர்.
    கூட்டம் முடிவடைந்த பின்னர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொ. அய்யாக்கண்ணு, புலியூர் நாகராஜன், விசுவநாதன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது:
    கூட்டத்தில், விவசாயக் கடனுக்காக விவசாயிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்புதல், ஜப்தி நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது, அரசு வழங்கி வரும் வறட்சி நிவாரணத் தொகையை விவசாயக் கடனுக்காக பிடித்தம் செய்து கொள்வது, நூறு நாள் ஊதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை பிடித்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினோம்.
    அதற்கு வங்கி அதிகாரிகள், உயர்அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினர். கூட்டத்தில் எங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.  ஒரு வாரக் காலத்துக்குள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து திருச்சியில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர் அவர்கள்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai