சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தியில் 265 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  திருச்சி மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கான வருவாயம் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி அனைத்து வட்டங்களிலும் மே 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
  நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள நிலம் சம்பந்தமான மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன. கரியமாணிக்கம், மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர் பகுதிகளுக்கு முறையே மே 3,4,5 தேதிகளில் ஜமாபந்தி நடத்தப்பட்டன.
  மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்களில் 205 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் பெறப்பட்ட 60 மனுக்களும் என மொத்தமாக மூன்று நாள்களில் 265 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார்.
  மீதமுள்ள மனுக்கள் மீது செவ்வாய்ககிழமைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
  ஜமாபந்தி நிகழ்வில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் முருகன், அலுவலக மேலாளர் சித்ரா, வட்டாட்சியர் மகாலட்சுமி, நில அளவைத் துறை உதவி இயக்குநர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai