Enable Javscript for better performance
விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என புகார்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை என புகார்

    By DIN  |   Published on : 07th May 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டின.
    இதுகுறித்து திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரக வளாகத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ. நாகராஜன் சனிக்கிழமை கூறியது:
    கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருந்த சிறு, குறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 16,94,145 விவசாயிகளின் பயிர்க்கடன்கள் ரூ. 5,780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளை சிறு, குறு விவசாயிகள் என தரம் பிரிக்காமல், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார்.
    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்து கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
    தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்து கடன் பெற்ற விவசாயிகளின் விவரம் குறித்து வேளாண் துறையில் விளக்கம் கோரியபோது அத்துறையினர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.  ஆனால், உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் மாநிலத்தில் 3,01,926 விவசாயிகள் மட்டும் உள்ளனர் என்றும், அவர்களின் கடன் ரூ. 1980.33 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
    எனவே, தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் அவர்.
    தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவ.சூரியன் கூறியது:
    ஏற்கெனவே, 400 விவசாயிகள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக இப்பிரச்னையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai