சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றார் வாழ்க விவசாயி இயக்கத்தின் தலைவர் யோகேந்திர யாதவ்.
    திருச்சி தூய வளனார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உழவர் உரிமைப் பயணம் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
      சுயாட்சி இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வறட்சி நிவாரணத்தை அமல்படுத்த வேண்டும். அதனடிப்படையில் தமிழக அரசு உடனடியாக  நிர்வாக ஆணைகளை வெளியிட்டு விவசாயிகளும், கிராமப்புற மக்களும் பயன்பெற நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    வறட்சி மற்றும் இதர பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் ஊரக மக்களுக்கு நிவாரணம் அளித்திட அரசியமைப்புச் சட்ட நிவாரண உரிமைப்படி தமிழக அரசு கேட்டத் தொகையை மத்திய அரசு பேரிடர் நிதியிலிருந்து ஒப்புதல் அளித்து வழங்க வேண்டும்.
    மத்திய அரசு தனக்கு இணக்கமாக இருக்கும் மாநிலத்துக்கோ, இணக்கமில்லாத மாநிலத்துக்கோ என்று பார்க்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றார் யாதவ்.
    முன்னதாக நடைபெற்ற உழவர் உரிமைப் பயண நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசுகையில், உழவர் உரிமைப் பயணத்தை தமிழகத்தில் தொடங்கும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தேன். மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலம், சிறந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் யாத்திரை முடிவில் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. மாநிலம் முழுவதும் வறட்சியால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து உள்ளனர். இதற்கு செயல்படாத மாநில அரசும், கண்டுகொள்ளாத மத்திய அரசுதம்தான் காரணம் என்றார் யாதவ். மே 4 ஆம் தேதி வேதாரண்யத்தில் தொடங்கிய பயணம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நிறைவடைந்தது.
    தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு சுயாட்சி இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். வாழ்க விவசாயி இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் அவிக் சா, உதவி ஒருங்கிணைப்பாளர் அஜித்சிங், செயலர் பிரபாத் சிங், சுயாட்சி இயக்கத் துணைத் தலைவர் கிறிஸ்டினா சாமி முன்னிலை வகித்தனர்.
    தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சுந்தர விமலநாதன், காவிரி தஞ்சை கடைமடை விவசாயிகள் சங்கத்தின் ராஜராமலிங்கம், தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொ. அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப. சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    சுயாட்சி இயக்க மாவட்டத் தலைவர் எரோணிமுஸ் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் ஜான் பீட்டர் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai