சுடச்சுட

    

    திருச்சி விமான நிலைய மேம்பாட்டுப் பணி: நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி

    By DIN  |   Published on : 08th May 2017 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி விமான நிலைய ஓடுதளம் நீட்டிப்பு, விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ஆணை வந்தவுடன் முதல்கட்டமாக 330 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமானங்களை அதிகளவில் இயக்கும் விமான நிலையம் திருச்சி. சர்வதேச அந்தஸ்து பெற்ற பின்னர் திருச்சியில் பயணிகள் மட்டுமின்றி சரக்கு ஏற்றுமதி இறக்குமதியிலும் வளர்ச்சி பெற்று வருகின்றது. மேலும் மாநிலத்தின் மையப்பகுதியில் இருப்பதால் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் திருச்சியில் கால்பதிக்க போட்டி போட்டு அனுமதி கேட்டு காத்துள்ளன. அனுமதி கிடைத்த சில நிறுவனங்கள் ஓடுதளம் நீளம் பற்றாக்குறையால் விமானப் போக்குவரத்துகளை தொடர முடியாத நிலை உள்ளது.
    எனவே திருச்சி விமான நிலைய ஓடுதளத்தை 8,136 அடியிலிருந்து சுமார் 12,500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், விமான நிலைய ஆணையம், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அளிக்கப்பட்ட கோரிக்கை மற்றும் கடிதங்கள் அடங்கிய கோப்பு தமிழக முதல்வரின் ஒப்புதலுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்தன.
    இந்நிலையில் கடந்த மே 3-ஆம் தேதி இதற்கான நிர்வாக ரீதியான அனுமதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன், விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான ப. குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது ஓடுதள விரிவாக்கப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட மேலும் சில திட்டங்களுக்கும் முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.
    இதுதொடர்பான கோப்பு மற்றும் ஆணை திருச்சி மாவட்ட ஆட்சியரகம் வந்தவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். ஓடுதளம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு மொத்தம் 510 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. கையகப்படுத்தப்பட உள்ள நிலப்பகுதிகளில் 164.68 ஏக்கர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான (ராணுவம்) நிலம்.  116.66 ஏக்கர் விவசாய நிலம், 40.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 188.37 ஏக்கர் தரிசு நிலம். இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் தவிர பிற நிலப்பகுதிகளை (சுமார் 330 ஏக்கர்) கையகப்படுத்தும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ நிலத்தை கையகப்படுத்த வேறு மாதிரியான நடைமுறைகள் இருப்பதால் அது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    மேம்படும்: திருச்சி விமான நிலையம் ஓடுதளம் 12,500 அடியாக நீடிக்கப்படும் நிலையில் சிங்கப்பூர், அரபுநாடுகள், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு விமான நிறுவனங்களும் திருச்சியில் போக்குவரத்தை தொடங்கும். வாரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படும். திருச்சியிலிருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai