சுடச்சுட

    

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில்...
    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.
    இக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கற்பகத்தரு, கிளி, பூதம், கமலம், கைலாச பர்வதம், அன்னம் என சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழாவின் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி மட்டுவார் குழலம்மை, சோமாஸ் கந்தருடன் தாயுமான சுவாமி பெருந்தேரிலும், மட்டுவார் குழலம்மை அம்மன் தேரிலும், பஞ்சமூர்த்திகள் பல்லக்கிலும் அதிகாலையில் எழுந்தருளினர்.
    சுவாமிகள் தேருக்கு எழுந்தருளிய பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க காலை 6.30 மணிக்கு சுவாமி தேரும், அதைத்தொடர்ந்து அம்மன் தேரும் வடம் பிடிக்கப்பட்டது.
    கோயில் உதவி ஆணையர் நா. சுரேஷ் மற்றும் திருவிழா உபயதாரர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.
    மலைக்கோட்டை தேரடி வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.சாலை, நந்திகோவில் தெரு, கீழ, வடக்கு ஆண்டார் வீதிகள் வழியாக வலம் வந்த தேர்கள் முறையே காலை 8.30  மற்றும் காலை 8.45 மணிக்கு நிலையை அடைந்தன.
    ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்மன் தேர்களை வடம்பிடித்து  இழுத்துச் சென்றனர். செவ்வாய்க்கிழமை (மே 9) காலை நடராஜர் தரிசனமும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருளலும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தலும் நடைபெறுகிறது.
    மே 10ஆம் தேதி திருக்குறிப்புத் தொண்டர் உள் புறப்பாடும், இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. மே 11ஆம் தேதி தாயுமான அடிகள் உற்ஸவமும், மாலையில்  சிரகிரி தட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மே 12ஆம் தேதி பிச்சாடனார் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி சண்டிகேசுவரர் வீதியுலா வருதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

    திருப்பைஞ்ஞீலியில்...
    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
    திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக உள்ள இக்கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டில் தொடங்கிய திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டதால், கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    நிகழாண்டு சித்திரைத் தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து காலையில் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் சிம்மம், கிளி, யாளி, அன்னம், பூதம் வாகனங்களில் நாள்தோறும் வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாலாட்சி அம்மன், சோமாஸ்கந்தர், விநாயகர், சண்டிகேசுவரர் சுவாமிகளுடன் ஞீலிவனேசுவரரும், வள்ளி, தெய்வசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமியும் தேரில் காலை 5.15 மணிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    பிற்பகல் 2.30 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்களின் நமச்சிவாய முழக்கத்துடன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேர் மாலை 6.50 மணிக்கு நிலையை அடைந்தது.
    தேரோட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர். செவ்வாய்க்கிழமை காலை நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரியும், மே 10ஆம் தேதி முத்துப் பல்லக்கு, மே 11ஆம் தேதி பஞ்சப்பிரகார உற்ஸவமும் நடைபெறுகிறது. மே 12ஆம் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.
    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ந.ஹேமலதா மற்றும் கிராம பட்டயதாரர்கள் செய்திருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai