சுடச்சுட

    

    சித்ரா பௌர்ணமியையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் புதன்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீநம்பெருமாளை வழிபட்டனர்.
    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியின்போது அம்மாமண்டபம் காவிரியாற்றில் கஜேந்திர மோட்சம் வைபவம் நடைபெறுவது வழக்கம்.
    நிகழாண்டில் புதன்கிழமை மாலை இந்த நிகழ்ச்சி காவிரியாற்றில் நடைபெற்றது.
    இதற்காக ஸ்ரீநம்பெருமாள் கருவறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிக்கு கஜேந்திர மோட்சத்திற்காக சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு காவிரியாற்றுக்கு 6.15 மணிக்கு வந்தடைந்தார். அங்கு கஜேந்திரன் (யானை ஆண்டாள்) முதலையிடம் சிக்குண்டு பிளிறுவது போன்று மூன்று முறை பிளிறியது.  அப்போது, அங்கு எழுந்தருளிய ஸ்ரீநம்பெருமாள் கஜேந்திரனுக்கு (யானைக்கு) காட்சியளித்து மோட்சம் அளித்தார். யானைக்கு சடாரி வைக்கப்பட்டு, சந்தனமிடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர்.பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு திருவூரல் ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 6.45 மணிக்கு வந்தார். அங்கிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு கோயில் கருவறை சென்று சேர்ந்தார் ஸ்ரீநம்பெருமாள்.  விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் செய்திருந்தார்.

    சிறப்பு ஏற்பாட்டால் பக்தர்கள் மகிழ்ச்சி!!
    ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியின்போது காவிரியில் தண்ணீர் இருக்கும். நிகழாண்டில் காவிரி வறண்டு காணப்படுவதால், கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி முறைப்படி நடைபெறுமா என்று பக்தர்களிடையே ஐயம் இருந்தது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமனின் தீவிர முயற்சியால், காவிரியாற்று படித்துறை அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு 2 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. வறண்ட காவிரி, தண்ணீரை உறிஞ்சாமல் இருக்க சுற்றிலும் பாலித்தீன் பேப்பர் கொண்டு தடுக்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீநம்பெருமாள் காவிரியாற்றின் தண்ணீரில் இறங்கி யானை ஆண்டாளுக்கு கஜேந்திர மோட்சம் அளித்ததை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai