சுடச்சுட

    

    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்: திருச்சி மாநகரில் தொடரும் போராட்டங்கள்

    By DIN  |   Published on : 12th May 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறையால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநகரின் 39-ஆவது வார்டு எடமலைப்பட்டிபுதூர் புதுமாரியம்மன் தெரு, புதுத்தெரு பகுதி மக்கள் தங்களுக்கு 10 நாள்களாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    இதேபோல, வியாழக்கிழமை காலை மாநகராட்சியின் 40-ஆவது வார்டு எடமலைப்பட்டிபுதூர் பகுதி பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி எடமலைப்பட்டிபுதூர் சாலையில் மேம்பாலம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
    இதுகுறித்து முத்துச்செல்வம் கூறுகையில், பிராட்டியூர் - சாத்தனூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஜீயபுரம் காவிரி ஆற்றிலிருந்து எங்களது பகுதிக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை குடிநீர் வடிகால் வாரியம் முறையாக செய்யாததால், மாநகரின் மற்ற பகுதிகள்போல, எங்களது 40-ஆவது வார்டுக்கு போதிய குடிநீர் வருவதில்லை. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டும் என போராடி வருகிறோம் என்றார்.
    தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான அதிகாரிகளும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாண்டியன், போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஜீயபுரம் குடிநீர் திட்டத்தை அடுத்த 2 மாதங்களுக்குள் மாநகராட்சியே எடுத்து நடத்தும். அதுவரை குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க ஜீயபுரம் நீரேற்று நிலையத்துக்கு ஜெனரேட்டர் வசதியும், உங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai