Enable Javscript for better performance
திருச்சி மாவட்டத்தில் மூடப்பட்ட இடங்களில் அரசு மணல் குவாரிகள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டத்தில் மூடப்பட்ட இடங்களில் அரசு மணல் குவாரிகள் திறப்பு

    By DIN  |   Published on : 12th May 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன. 2-வது நாளாக குவாரியில் முற்றுகைப் போராட்டங்களும் தொடர்கின்றன.
    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் செயல்பட்ட 44 மணல் குவாரிகளில் 34 மணல் குவாரிகள் மூடப்பட்டன. திருச்சி, கரூர் மற்றும் அரியலுôர் மாவட்டங்களில் மட்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மணல் குவாரிகள் செயல்பட்டுவந்தன. கடும் வறட்சி நிலவுவதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதனால் திருச்சி, அரியலுôர், கரூர் மாவட்டங்களில் உள்ள 9 குவாரிகளில் மணல் அள்ளுவது, கடந்த ஏப். 29-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
    திருச்சி மாவட்டத்தில் மணல்மேடு, கரியமாணிக்கம், கிளியநல்லுôர், திருவாசி, புள்ளம்பாடி ஆகிய இடங்களில் செயல்பட்ட மணல்குவாரிகள் மூடப்பட்டன. பின்னர் மணல் குவாரிகளை அரசே திறந்து நடத்தும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவுக்குட்பட்ட வீரகலுôர் திண்ணக்குளம் பகுதியில், கூழையாற்றில் மூடப்பட்டிருந்த மணல் குவாரி புதன்கிழமை திறக்கப்பட்டது.
    ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரிகளின் நேரடி பார்வையில் மணல் விற்பனை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கொண்டையம்பேட்டை, சீலைப்பிள்ளை புதூர் ஆகிய இடங்களில் மூடப்பட்டிருந்த குவாரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டு, மணல் விற்பனை தொடங்கியுள்ளது.
    அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளில், 2 யூனிட் மணல் ரூ. 800, மணல் அள்ளும் கூலி ரூ. 210, வரி ரூ. 40 என மொத்தம் ரூ. 1,050-க்கு வங்கி வரைவோலை (டி.டி) எடுத்து வருவோருக்கு மட்டுமே மணல் விற்கப்படுகிறது.
    ஆனால் ஏராளமானோர் டிடி எடுக்காமல் மணல் வாங்க வந்திருந்தனர். அவ்வாறு வந்தவர்களை டிடி எடுத்து வருமாறு அறிவுறுத்தி திருப்பியனுப்பினர்.
    இதற்கிடையே பல்வேறு காரணங்களைக் கூறி குவாரியில் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஹென்றி சேகர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கெனவே சுமார் 20 ஆழத்துக்கு மணல் தோண்டப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்த க்கூடாது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகக் கூறினர். பின்னர் பணி வழங்குவதாகவும், பொக்லைன் இயந்திரம் மூலம் குறைந்த ஆழத்தில் மணல் அள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai