சுடச்சுட

    

    திருச்சி அருகே மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து 2 ஆயிரம் லாரிகள் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 14th May 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசு மணல் குவாரியில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து 2 பேருந்துகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளை அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    லால்குடி அருகேயுள்ள விரகாலூர் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் மே 10ஆம் தேதி முதல் மணல் விற்பனை தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், குவாரியில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
    இந்நிலையில், சனிக்கிழமை காலை நத்தம் கிராமத்திலிருந்து திருச்சி செல்லும் பேருந்து, பாடாலூர் செல்லும் பேருந்து என 2 அரசுப் பேருந்துகளையும், அவ்வழியாக மணல் அள்ள வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளையும் நத்தம் ஊராட்சித் தலைவர் முடியரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
    சிறைபிடித்தனர்.
    இதுகுறித்து நத்தம் கிராம மக்கள் கூறியதாவது:
    கடந்த 3 ஆண்டுகளாக இங்கு மணல் அள்ளுபவர்கள் இப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்டும், எங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தும் வந்ததால் மணல் அள்ளும் பணிகள் பிரச்னையின்றி நடைபெற்று வந்தது. அதேபோல் இப்பகுதியை சேர்ந்த விரகாலூர், நத்தம், மாங்குடி, தின்னக்குளம், களத்தில் வென்றான் பேட்டை ஆகிய 5 கிராம மக்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு தினசரி வேலைவாய்ப்பு வழங்கினர்.
    ஆனால், தற்போது அரசு மணல் விற்பனை செய்வதால் இப் பகுதியைச் சுற்றி 5 கி.மீ. தொலைவிற்கு மணல் லாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கிறது. இதனால் மருத்துவமனை மற்றும் அவசரப் பணிகளுக்கு செல்ல தாமதமாகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
    இதனால்தான் பேருந்துகளையும், மணல் அள்ள வந்த லாரிகளையும் சிறைபிடித்தோம் என்றனர். மாலைவரை பேருந்துகள், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai