சுடச்சுட

  

  நவீனமயமாகிறது அஞ்சல் விநியோகம்: தபால்காரர்களுக்கு சிறப்பு மென்பொருளுடன் ஸ்மார்ட்போன் வழங்கல்

  By DIN  |   Published on : 17th May 2017 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஞ்சல் விநியோகத்தை நவீனப்படுத்தும் விதமாக மாநகரங்களில் பணியாற்றும் தபால்காரர்களுக்கு (போஸ்ட்மேன்) ஸ்மார்ட் போன் (நவீன செல்லிடப்பேசி) வழங்கப்பட்டுள்ளது.
  அஞ்சல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சில ஆண்டுகளாக அஞ்சல்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன. தற்போது, பேப்பர் இல்லா நடவடிக்கை ஊக்குவிக்கும் விதமாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மாநகரங்களில் தபால்காரர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
  இதில் அஞ்சல்துறையின் “போஸ்ட்மேன்’ என்ற மென்பொருள் ஏற்றப்பட்டு, அஞ்சல்துறை விநியோகிக்கும் அனைத்து தபால்கள், பார்சல் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விநியோகம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் வழியே, அதிகமாக பேப்பர் வழியே செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து திருச்சி மண்டல அஞ்சல்துறை உயரதிகாரிகள் கூறியது:
  அஞ்சல் விநியோகத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பேப்பர் இல்லா முறையை ஊக்குவிக்கும் விதமாகவும் மாநகரில் உள்ள தபால்காரர்களுக்கு போஸ்ட்மேன் என்ற மென்பொருள் அடங்கிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
  இந்த மென்பொருளில் தபால்காரர் பட்டுவாடா செய்ய வேண்டிய ஸ்பீடு போஸ்ட், ரெஜிஸ்டர் போஸ்ட், பார்சல் உள்ளிட்டவற்றின் விவரங்கள், வழங்க வேண்டியவரின் விலாசம், பெற வேண்டிய பணம் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இதனை அஞ்சல்துறை அலுவலர்கள், ஒரு நபர் தபால், பார்சல் அனுப்ப பதிவு செய்தவுடன் கணினியில் பதிவேற்றம் செய்து, அதனை தபால்காரரின் ஸ்மார்ட் போனிலும் பதிவு செய்திருப்பர். காலையில் வரும் தபால்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தபால் மற்றும் பார்சல்களுடன், இந்த ஸ்மார்ட் போனையும் கொண்டு செல்வர். வாடிக்கையாளரிடம் தபாலை ஒப்படைத்துவிட்டு, இந்த ஸ்மார்ட் போனிலேயே கையெழுத்து வாங்கிக் கொள்வர். மேலும், அதிலேயே டெலிவரி பதிவும் செய்துவிடுவர்.
  இந்தப் பதிவுகள் உடனுக்குடன் மைய கணினியில் பதிவேற்றப்படும். இதனை வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலேயே பார்த்து, தங்களது தபால் சரியானவருக்கு போய்ச் சேர்ந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ள முடியும் என்றனர்.
  அஞ்சல்துறை ஊழியர்கள் கூறுகையில், மேற்கண்ட செயல்முறையால் அஞ்சல்துறை ஊழியர்கள் செய்யும் வேலைபளு கணிசமாக குறையும். பேப்பர் பயன்பாடு இருக்காது. தபால்காரர்களும் தங்களது பணியை விரைந்து முடிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கும் தபால் குறித்த விவரங்கள் உடனுக்குடன் தெரிந்துவிடும் என்றனர்.

  மாநகரில்  75 போஸ்ட்மேன்களுக்கு ஸ்மார்ட் போன்
   திருச்சி மாநகரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம், உறையூர், தில்லை நகர், தென்னூர், தெப்பக்குளம், கண்டோன்மென்ட், பொன்மலை உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றும் 75 தபால்காரர்களுக்கு போஸ்ட்மேன் மென்பொருள் ஏற்றப்பட்ட சாம்சங் ஜெ2 ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் குழப்பத்தை மனதில் கொண்டு, பேப்பரில் கையெழுத்து வாங்கும் முறையும் சில நாள்களுக்குத் தொடரும் என திருச்சி தலைமை அஞ்சல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai